இன்டர்நெட் குறித்த பல தவறான கருத்துகள் எப்படியோ பரவி அனைவரிடமும் உண்மையான தகவல் என்று பதிந்து போயுள்ளன. இதற்குக் காரணம் மீடியாக்களும் சிலவற்றை நம்பி உண்மை என அவற்றைப் பரவி விட்டதே காரணம். அவை எவை என்று இங்கு காணலாம்.
1. அமெரிக்க துணை ஜனாதிபதி அல் கோர் (Al Gore) என்பவர்தான் இன்டர்நெட்டைக் கண்டுபிடித்தார். அவரே இதனை ஒரு பேட்டியில் கூறினார். இன்னொரு பக்கம் அவர் அப்படியெல்லாம் தனக்கு தேவையில்லாத பெருமையினைக் கோர வில்லை; ஆனால் இன்டர்நெட்டைக் கொண்டு வந்தேன் எனக் கூறினார் என்றும் சில இதழ்கள் எழுதின. எது உண்மை?
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, 1999 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று சி.என்.என். செய்தி நிருபர், அல் கோரை நோக்கி தங்களிடம் உள்ள சிறப்பு என்ன என்று கேட்டார். அதற்கு அல் கோர், “நாட்டில் கல்வி, பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பிற்கெனத் தான் பல திட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றதாகக் கூறினார். தொடர்ந்து அதற்கு இன்டர்நெட்டினை உருவாக்குவதில் தொடக்க நிலையில் ஒத்துழைத்தேன்” என்று கூறினார். இது திரிக்கப்பட்டு இன்டர்நெட்டினை அவர்தான் உருவாக்கினார் என்று மாறி, அதுவே மறுக்கப்படாத தகவலாகவும் உறுதியானது. பின்னர் உண்மையான தகவல் தெரிவித்தது பலரைச் சென்றடையவில்லை.
2. உங்களுக்கு இன்டர்நெட் சேவை தரும் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் , இன்டர்நெட்டில் உங்களின் ஒவ்வொரு செயலையும் கண்டறிந்து பதிந்து வைக்கிறது. இதுவும் ஒரு கதையே. உங்களையும் உலகளாவிய இன்டர்நெட்டினையும் இணைப்பது இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனமே. நீங்கள் காண விரும்பும் இணைய தளங்களையும், நீங்கள் அனுப்பும் இமெயில் செய்திகளையும் இந்த நிறுவனத்தின் சர்வர் வழியாகத்தான் செல்கின்றன. இவற்றைப் பார்க்கக் கூடிய வழிகள் இந்த நிறுவனத்திற்கு உண்டு. ஆனால் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் அவற்றிற்கான கட்டமைப்பை உருவாக்க, புரோகிராம்களை எழுதி இயக்க நிறைய பணம் தேவைப்படும்.
மேலும் அவை எல்லாம் வெட்டிச் செலவாகிவிடும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இவற்றைப் பதிவு செய்வது இல்லை. அரசால் சந்தேகப்படும் நபர்களின் இணைய நடவடிக்கைகள் மட்டுமே கண்காணிக்கப் படுகின்றன. எனவே அனைவரது இன்டர்நெட் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது உண்மை அல்ல.
3 குழந்தைகள் இன்டர்நெட்டில் உள்ள பாலியியல் தளங்களினால் கெடுக்கப் படுகின் றனர். மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். குற்றம் செய்ய தூண்டப்படுகின்றனர். இதனாலேயே பெற்றோர்கள் இன்டர்நெட் தளங்களைத் தடை செய்கின்றனர். இது முழுவதும் உண்மை அல்ல; குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களே பாலியியல் குற்றங்களை இன்டர்நெட்டின் மூலம் மேற்கொள்கின்றனர். இன்டர்நெட்டினை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே குழந்தைகள் கெட்டுப்போகின்றனர் என்பது முற்றிலும் உண்மை அல்ல.
4. இன்டர்நெட்டில் படிப்பதெல்லாம் உண்மை. இன்டர்நெட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென பிளாக்கு களைத் தொடங்கித் தங்கள் கருத்துக்களை பதிக்கலாம். அப்படி இருக்கையில் இன்டர்நெட் தளங்களில் இருப்பது அனைத்தும் உண்மைத் தகவல்கள் என்று நம்ப முடியாது. யார் வேண்டுமானாலும் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப எழுதி பிரசுரிக்கலாமே. அப்புறம் எப்படி அனைத்தும் உண்மை ஆகும்.
எனவே இணையத்தில் தகவல்களைப் படிக்கையில் அவற்றின் உண்மைத் தன்மை யினை உணர வேண்டும்.
தகவல்களைத் தரும் தளங்களின் தன்மை எப்படிப்பட்டவை என்று காண வேண்டும். அரசு, நிறுவனங்கள், அரசு ஆதரவு பெற்ற பொதுவான அமைப்புகளின் தளங்கள் தரும் தகவல்களை மட்டுமே அப்படியே எடுத்துக் கொள்ளலாம். புகழ்பெற்ற பத்திரிக்கைகளின் தளங்களும் உண்மைச் செய்திகளையே தரும். மற்றவற்றை தீர யோசித்த பின்னரே அல்லது மற்ற தளங்களையும் பார்த்த பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
5. இன்டர்நெட் உங்களை கோடீஸ்வரனாக மாற்றும். இன்று இன்டர்நெட் மூலம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தேன். பல்லாயிரக் கணக்கான டாலருக்கு அதிபதியானேன் என்பதெல்லாம் கதை. இந்த கதைகளைக் கூறி, தளங்களுக்கு இழுத்துச் சென்று நம் பணத்தைப் பறிக்கும் வழிகளாகும். இன்டர்நெட் வழியாக உங்கள் வர்த்தகத்திற்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பது உண்மையே. ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் என்பதுவும் உறுதி செய்யப்பட்டதே. ஆனால் அதற்காக இதனை விளம்பரம் மூலம் கூறி உங்களை இழுக்கும் இணைய தளங்கள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள்
Adware: : சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு.
Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால், உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோ கிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.
Bandwidth : ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.
Browser: இன்டர்நெட்டில் உள்ள தகவல்களை எடுத்துத் தரும் சாப்ட்வேர் தொகுப்பு.
Buffer: தற்காலிகமாக டேட்டாவைச் சேமித்து வைக்கும் இடம்; இதனை புரோகிராம்களும் பிரிண்டர், சிடி ரைட்டர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய டேட்டாவைத் தங்க வைத்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும்.
Cache: இதுவும் தற்காலிக மெமரிதான். நீங்கள் பயன்படுத்தும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களைத் தற்காலிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம். ஒவ்வொருமுறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள் கையில் இதற்கென புதிய தகவல்களைப் பெற்று செயல்படாமல் தேக்கி வைக்கப் பட்டுள்ள இந்த கேஷ் மெமரியிலிருந்து பெற்று பிரவுசர் பயன்படுத்திக் கொள்ளும்.
Cookie: வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறிய புரோகிராம். அந்த வெப் சைட்டைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் பதியப்படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கொண்டு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்.
DNS (Domain Name System): நாம் சொற்களில் தரும் இணைய தள முகவரியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் அதன் எண் முகவரியினைத் தரும் சிஸ்டம். ஒவ்வொரு இண்டர்நெட் சேவை நிறுவனமும் இப்படி ஒரு சிஸ்டத்துடன் தொடர்பு கொண்ட பின்பே நாம் விரும்பும் இணைய தளத்தைப் பெற்றுத் தருகிறது.
Netiquette: இணையத்தில் உலவுகையில் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கையில் ஆன் லைனில் தொடர்பு கொள்கையில் நாம் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை இந்த சொல் குறிக்கிறது.
Quicktime : ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மல்ட்டி மீடியா புரோகிராம். இதன் மூலம் மல்ட்டி மீடியா (ஆடியோ மற்றும் வீடியோ) உருவாக்கவும், இயக்கிப் பார்க்கவும் எடிட் செய்திடவும் முடியும். இன்டர்நெட்டில் இந்த புரோகிராம் மட்டுமே இயக்கிப் பார்க்க முடியும் பைல்களை நீங்கள் கிளிக் செய்தால் இந்த ஆட்–ஆன் புரோகிராம் வேண்டும் என்றும் அதன் தளத்திலிருந்து இறக்கிப் பதியவா என்றும் உங்கள் பிரவுசர் கேட்கும். இந்த புரோகிராமினை ஏற்கனவே பதிந்து வைத்திருந்து அதற்குப் பின் புதியதாக அது மேம்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமினை மேம்படுத்தவா என்றும் உங்கள் பிரவுசரில் செய்தி கிடைக்கும்.
Traceroute: இணையத் தொடர்பில் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்புப் பாதையைக் கண்டுபிடிக்கும் கட்டளைச் சொல். இந்த கட்டளைச் சொல்லை எம்.எஸ். டாஸ் பிராம்ப்டில் கொடுத்து ஏதேனும் ஒரு இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்துப்பாருங்கள். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் இணைய தொடர்பில் இருக்க வேண்டும். அந்த முகவரி குறிப்பிடும் இணைய தளம் உள்ள சர்வரை எந்த வழியாக உங்கள் கம்ப்யூட்டர் சென்றடைகிறது என்ற தகவல் கிடைக்கும்.
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு பேஜ் பிரேக் உருவாக்குவது எப்படி? பின் தேவை இல்லை என்றால் அதனை நீக்குவது எப்படி?
பதில்: எந்த இடத்தில் பேஜ் பிரேக் வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வைத்து, பின் கண்ட்ரோல் + என்டர் தட்டுங்கள். பேஜ் பிரேக் கிடைக்கும். இதனை மெனு பார் வழியாகவும் மேற்கொள்ளலாம். இன்ஸெர்ட் மெனு சென்று அதில் முதலாவதாகக் கிடைக்கும் பிரேக் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய பாக்ஸ் ஒன்றுகிடைக்கும். அதில் பிரேக் டைப்ஸ் மற்றும் செக்ஷன் பிரேக் டைப்ஸ் என்ற இரண்டு வகை பிரேக் பிரிவுகள் இருக்கும். உங்களுக்கு எந்த வகை பிரேக் வேண்டுமோ அதற்கான ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்திடலாம். இங்கு சென்றால் அனைத்து வகை பிரேக் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
இனி இதனை நீக்கும் வழியைப் பார்க்கலாம். டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு, பேஜ் பிரேக் உங்கள் டாகுமெண்ட்டில் புள்ளிகள் வைத்த பெரிய நீண்ட கோடாகக் காட்சி அளிக்கும். டாகுமெண்ட் நார்மல் வியூவில் இருக்க வேண்டும். இதற்கு வியூ மெனுவில் நார்மல் தேர்ந்தெடுக்கவும். இந்த வியூவில் தான் பேஜ் பிரேக் கோடாகத் தெரியும். பேஜ் பிரேக் உள்ள இடத்திற்குச் செல்லவும். அங்கு கர்சரை வைத்து டெலீட் பட்டன் அழுத்தினால் பேஜ் பிரேக் நீக்கப்படும். அல்லது அம்புக் குறி கர்சரை பேஜ் பிரேக் கோட்டில் இடது மூலைக்குக் கொண்டு சென்று கிளிக் செய்தால் பேஜ் பிரேக் கோடு தேர்ந்தெடுக்கப்படும். பின் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் அழுத்தி இதனை நீக்கலாம்.
என் வயது 3 கோடி நிமிடங்கள்
நீங்கள் பிறந்து எத்தனை வருஷம்? உங்கள் வயசு என்ன என்று கேட்டால் நீங்கள் உடனே சொல்லி விடுவீர்கள். நீங்கள் பிறந்து எத்தனை வாரங்கள், எத்தனை நாட்கள், எத்தனை நிமிடங்கள் எத்தனை விநாடிகள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? சற்று முழிப்பீர்கள். இத எப்படி கணக்கு பண்ணுவது என்று திகைக்கலாம்.
சரி, சென்னை யிலிருந்து மதுரை அல்லது கோயம்புத்தூர் எவ்வளவு தூரம் என்று கேட்டால் இத்தனை கிலோ மீட்டர் என்று சொல்லிவிடலாம். எத்தனை மைல் என்று கேட்டால் சற்று வயதானவர்கள் தங்களின் பழைய கால நினைவிலிருந்து சொல்லலாம்; எத்தனை கடல்மைல் என்று கேட்டால் எப்படி மாற்றிச் சொல்வது?
நீங்கள் பத்து வயசை எப்போது அடைந்தீர்கள் என்று கேட்டால் சொல்லலாம். எப்போது 25 ஆயிரம் நாளைக் கடந்தீர்கள் என்று கேட்டால் எப்படிச் சொல்வது? உங்கள் வயது எப்போது 2000 வாரங்களை அடைந்தது என்று எப்படிக் கணக்கிடுவது?
மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமின்றி இன்னும் பல இதைப் போன்ற கணக்குகளுக்கு விநாடிகளில் விடை தரும் இணைய தளம் ஒன்று உள்ளது. இதனைப் பார்த்து பலவகைகளில் நான் அதிசயித்துப் போனேன். இந்த தளத்தின் முகவரி http://www.timeanddate.com. இது குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
நேரம் மற்றும் காலம் இவற்றின் முழு பரிமாணங்களைப் பலவகைகளில் அறிய இது உதவுகிறது. உலகின் எந்த இடத்திலிருந்தும் நேரத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் காலத்தைக் கணக்கிடலாம். இதன் முகப்பு பக்கம் சென்றவுடன் உள்ள பிரிவுகள் நம்மை மலைக்கச் செய்யவில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் நுழைந்து கணக்கீடுகளைப் பெறுகையில் இதன் வேகமும் துல்லியமும் நம்மை அதிசயப்பட வைக்கின்றன.
முதல் பிரிவில் உலகக் கடிகாரம் பல்வேறு மண்டல நேரப்படி காட்டப்படுகின்றன. நகரத்தின் பெயரை டைப் செய்து தேடச் சொன்னால், அது உலகின் எந்த நேர மண்டலத்தில், தற்போது எந்த நேரத்தில் உள்ளது என்று காட்டுகிறது.
இந்த மண்டல நேர அட்டவணையைக் கொண்டு ஒருவரைச் சந்திக்கும் நேரத்தினை வரையறை செய்திடலாம்.
சூரியன் மற்றும் நிலவு தோன்றும் காலத்தை ஒவ்வொரு நாடு வாக்கில் கணக்கிடுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உலகம் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊர் உலகத்தின் மற்ற ஊர்களுடன் ஒப்பிடுகையில் பகலா, இரவா, அந்திப் பொழுதா என்று உலகப் படம் போட்டுக் காட்டுகிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் எங்கு, எப்போது, எப்படித் தோன்றும் என்று விளக்கங்களுடன் காட்டப்படுகிறது.
பன்னாடுகளுக்கும் டயல் செய்திட ஐ.எஸ்.டி.டி. கோட் எண்கள் பட்டியல் கிடைக்கிறது. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் உள்ள தூரம் என்ன என்று காட்டுகிறது. சென்னைக்கும் மதுரைக்கும் 424 கிமீ, 263 மைல், 229 கடல் மைல் எனத் தருவதுடன், உலக வரைபடத்தில் இரண்டு நகரங்களின் இடத்தையும் குறித்து அந்த நேரத்தில் அங்கு பகலா இரவா என்றும் காட்டுகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் பதிவான வெப்ப நிலை, அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டுமின்றி அடுத்த வாரம் முழுவதும் வானிலை எப்படி இருக்கும் எனத் துல்லிதமாகக் காட்டுகிறது. சூரிய உதயம் வட கிழக்கில் 79 டிகிரி சாய்வாக காலை 5.57க்கு இருக்கும் என்று கணக்கிட்டுச் சொல்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் நாசாவின் சாட்டலைட்டிலிருந்து பெறப்பட்டு தரப்படுகின்றன.
சென்னையிலிருந்து மதுரை மட்டுமல்ல, உலகின் எந்த நகரத்திற்குமான தூரத்தைப் பெறலாம். உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் பிளாக்குகளில் பதிந்து வைக்க டிஜிட்டல் கடிகாரத்திற்கான பைலை டவுண்லோட் செய்து இணைக்கலாம்.
எந்த ஆண்டின் எந்த மாதத்திற்குமான காலண்டரை அந்த ஊருக்கேற்ப பெறலாம்.
பிறந்த நாளைக் கொண்டு உங்களின் வயதினைப் பெறும் வசதிதான் நம்மை அசத்துகிறது. அடுத்த ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு இன்னும் எத்தனை நாள், மாதம், வாரம், மணி எனவும் கணக்கிட்டுச் சொல்கிறது. மேலே சொன்ன தகவல்களுடன் இன்னும் பல தகவல்களை இந்த தளம் சென்று பார்க்கலாம். தங்கள் அலுவல்களைத் திட்டமிடுபவர்கள் மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் திட்டமிட இந்த தளத்தை அருமையாகப் பயன்படுத்தலாம்.
http://www.dinamalar.com/new/cmalar_detail.asp?news_id=824&dt=12-30-99